என் மலர்
தமிழ்நாடு
சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
- 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளம் வருகிறார் பிரதமர். அங்கிருந்து தொடக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.