என் மலர்
தமிழ்நாடு
காதல் திருமணம் செய்த பெண் கடத்தி கொலை? உயிர் ஊஞ்சலாடுவதாக மிரட்டல் விடுத்த கணவனை பிடிக்க வேட்டை
- உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.
- மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி:
புதுக்கோட்டை தெற்கு சந்தைபேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மை பணியாளரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். இதை தொடர்ந்து அவரது இளைய மகள் உமா மகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து உமா மகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியுடன் மயிலாடுதுறை பண்டார தெருவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை கறம்பக்குடி பல்லவராயன்புரத்தை சேர்ந்த மாரி முத்துவுடன் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. முதலில் உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.
திருமணத்துக்கு பிறகு மாரிமுத்து உமா மகேஸ்வரியை துன்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரி வேலை செய்யும் இடத்துக்கே நேரில் சென்று அவரை பற்றி தவறாக பேசுவதையும் மாரிமுத்து வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் மனம் வேதனையடைந்த உமாமகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கணவர் மாரிமுத்துவின் தொல்லைகள் குறித்து கூறி கதறி அழுதார்.
இதன் காரணமாக உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்று உமா மகேஸ்வரியை பிரித்து அழைத்து வந்துவிட்டனர். இதன்பின்னர் உமா மகேஸ்வரி தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறையில் தனது தாயுடன் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலருடன் காரில் வந்த கணவர் மாரிமுத்து, மனைவி உமாமகேஸ்வரியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு க்கொண்டு கடத்தி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தனலட்சுமி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனே கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் உமா மகேஸ்வரியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. எனவே இது பற்றி தீவிர விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் கணவர் மாரிமுத்து மகளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரிமுத்து செல்போனில் பேசி அனுப்பிய மிரட்டல் ஆடியோவையும் தனலட்சுமி போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ளார். அதில் 'உன்னை உயிரோடு விடமாட்டேன். எனக்கு துரோகம் செய்த உன் உயிர் ஊஞ்சலாடி க்கொண்டிருக்கிறது' என்று மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவரது நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அவரை கணவர் மாரிமுத்து கொலை செய்ருதிக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாரிமுத்து இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கணவர் மாரிமுத்து சிக்கினால் மட்டுமே உமா மகேஸ்வரியின் நிலை என்ன என்பது தெரிய வரும் என்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
மாரிமுத்துவின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் பணியில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.