search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் நடைபயணம் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்- பி.ஆர்.பாண்டியன்
    X

    சுங்கான்கடை சாலையோர கடையில் டீ குடித்தபடி விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியனுடன் பேசிய ராகுல்காந்தி.

    ராகுல் நடைபயணம் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்- பி.ஆர்.பாண்டியன்

    • விவசாயப் பிரதிநிதிகள் தமிழில் கூறியதை, ஜோதிமணி எம்.பி. ஆங்கிலத்தில் ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து எடுத்துக் கூறினார்.
    • மதத்தின் அடிப்படையில் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போவதை காரணியாக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ராகுல் காந்தியுடன் 2 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையும் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து விவசாய பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார்.

    தமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை ராகுல் காந்தியிடம் விவசாயிகள் எடுத்து கூறினார்கள். விவசாயப் பிரதிநிதிகள் தமிழில் கூறியதை, ஜோதிமணி எம்.பி. ஆங்கிலத்தில் ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து எடுத்துக் கூறினார்.

    இதைத் தொடர்ந்து பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் ராகுல் காந்தியிடம் உங்களது பாதயாத்திரையை உரிய காலத்தில் காந்தியின் வழியில் தொடங்கி இருக்கிறீர்கள். இந்தியா ஒன்றுபட வேண்டும் என்றால் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கொள்கை திட்டம் வகுத்து காந்தி போராடினார்.

    அதன் மூலம் பெற்ற உரிமைகள் இன்று மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நேரத்தில் உங்களது நடைபயணம் வெற்றி பெறும். அதற்கான தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் உங்களுடன் பாத யாத்திரை மேற்கொள்கிறோம் என தெரிவித்தோம்.

    விவசாயிகளுக்கான பிரச்சினைகளில் குறிப்பாக விவசாய உற்பத்தியிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுதான் மத்திய அரசால் ஏற்பட்டு உள்ளது. சிறு, குறு விவசாயிகள்தான் வேளாண் உற்பத்தியை பெருக்கி இருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் கொரோனாவை எதிர்கொண்டு இந்த விவசாயிகள் தான் உற்பத்தியை பெருக்கினார்கள்.

    அதனால் தான் உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறி இருக்கிறது என்று பிரதமர் மோடி மார்தட்டி கொண்டார். ஆனால் அந்த விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை ஏற்க மறுக்கிறார். உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க மறுக்கிறார்.

    உரிய விலை, சந்தை ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளில் உள் நாட்டு விவசாயிகளுக்கு பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்று போராடினோம். போராட்டத்தை திரும்ப பெறுங்கள். நான் குழுவை கூட்டி நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார்.

    ஆனால் இதுவரையிலும் குழுவை கூட்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தையும் மதத்தை சொல்லி திசை திருப்ப முயற்சித்தார். விவசாயிகளிடையே பிளவு ஏற்படுத்த முயற்சித்தார். அதனால் மதத்தின் அடிப்படையில் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போவதை காரணியாக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது.

    இந்த வேளையில் உங்களது பயணம் அதற்கு தீர்வு காணும் என்று நம்புகிறோம். எங்களிடம் கேட்டிருக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் ஒற்றுமையை எந்த அடிப்படையில் உருவாக்கப் போகின்றோம் என்பதை நீங்கள் கொள்கை திட்டம் வகுத்து வெளியிடுங்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டோம். அதை பரிசீலிப்பதாக அவர் கூறி உள்ளார்.

    நாங்கள் தெரிவித்த விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் அவர் தெளிவுபடுத்தி கேட்டுக்கொண்டார். இப்போது மத்திய அரசு மூன்றாம் தரமாக தான் மக்களை பார்க்கிறார்கள் என்று சொன்னோம். அதற்கு அவர் முதல் தரமாக யாரை பார்க்கிறார்கள் என்று கேட்டார். முதலில் அவருடைய கட்சி கொள்கை. 2-வது கார்ப்பரேட்டுகள். மூன்றாவதாக மக்களை பார்க்கிறார்கள் என்று சொன்னோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×