search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடலூரில் இன்று மாலை பாதயாத்திரை- பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்காந்தி
    X

    ராகுல் காந்தி

    கூடலூரில் இன்று மாலை பாதயாத்திரை- பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்காந்தி

    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
    • நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.

    ஊட்டி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.

    கடந்த 11-ந் தேதியில் இருந்து நேற்று வரை 21 நாட்கள் கேரள மாநிலம் முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, பழங்குடியின மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    இன்று அவர் தமிழகத்தில் மீண்டும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரள மாநிலம் நிலம்பூர், வழிக்கடவு வழியாக இன்று மாலை 3 மணியளவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்திற்கு ராகுல்காந்தி வருகிறார்.

    அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி, பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வரை 6 கி.மீ. தூரத்திற்கு பாதயாத்திரையாக வருகிறார்.

    அங்கு அவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மெயின்ரோடு வழியாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு காரில் கர்நாடகாவுக்கு செல்கிறார்.

    ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு கூடலூரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராகுல்காந்தியின் பாதயாத்திரையையொட்டி கூடலூரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களையும் முன்கூட்டியே வீடுகளுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்த அந்தந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×