என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/11/05/1787018-ramanadhidam.jpg)
ராமநதி அணை
ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 67 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
- உடன்குடி வட்டார பகுதியில் விடிய விடிய விட்டு விட்டு மழை செய்து கொண்டிருந்தது.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பணகுடி, சேரன்மகாதேவி, பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கல்லூர், பத்தமடை, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேரன்மகாதேவியில் இன்று காலை நிலவரப்படி 53.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அணை பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் மழை கொட்டித்தீர்த்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று காலை வரை 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று 1321 கன அடியாக உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. ஒரு சில இடங்களில் பிரதான சாலைகள் கூட சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடையம் அருகே 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதியின் நீர்மட்டம் நேற்று 53.90 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 58 அடியாக அதிகரித்துள்ளது.
இதேபோல் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 58.75 அடியாக இருந்த நிலையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் இன்று ஒரே நாளில் 6 அடி அதிகரித்து 65 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13 சென்டிமீட்டர் மழை அங்கு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் 33.62 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவை. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் நாளை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 62 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் 52 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 67 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. வைப்பார், சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.
கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை பகுதிகளில் சில கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன. எட்டையபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
உடன்குடி வட்டார பகுதியில் விடிய விடிய விட்டு விட்டு மழை செய்து கொண்டிருந்தது. இன்றும் காலையில் மழை பெய்தது. கொட்டங்காடு, ஞானியார்குடியிருப்பு, உதிரமாடன்குடியிருப்பு, கந்தபுரம், மாடவிளை, தாண்டவன்காடு மாதவன்குறிச்சி, சிறு நாடார்குடியிருப்பு, பெரியபுரம், மணப்பாடு குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, சீர்காட்சி பிச்சிவிளை, நயினார்பத்து, நயினார் புரம், சுதந்திரநகர், பரமன்குறிச்சி, அத்தியடி தட்டு, வட்டன் விளை, செட்டியாபத்து, வேப்பங்காடு, லட்சுமிபுரம், மெய்யூர், பிறைகுடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை விட்டுவிட்டு லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து இன்று பஜார் வீதியில் சுற்றுப்புற பகுதியில் உள்ள தெருக்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி கிடந்தது. இந்த மழையினால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.