search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை குடியரசு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி மெரினா கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றுகிறார்
    X

    நாளை குடியரசு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி மெரினா கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றுகிறார்

    • உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெறுகிறது.
    • ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்படுகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்வார்கள். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார்.

    காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார். பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார்.

    காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தருவார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார். அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

    பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

    பின்னர் ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக் கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்படும்.

    அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்துச் செல்வார்கள்.

    அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

    அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×