என் மலர்
தமிழ்நாடு
ரெட்டேரி ஏரியை ஆழப்படுத்தும் பணி தீவிரம்
- பறவைகள் தங்கும் வகையில் இந்த ஏரிக்குள் 3 செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
- வற்றாத ரெட்டேரி ஏரியில் எப்போதும் நீர் இருந்ததால் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 80 அடி முதல் 200 அடி வரை போர் போடப்பட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
கொளத்தூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, போரூர், ரெட்டேரி ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகளுக்கிடையே கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பஞ்சத்தை தீர்க்க நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியில் சுமார் 30 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு இருந்து வருகிறது. இதை விரிவுபடுத்தும் வகையில் ரூ.44.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏரியை ஆழப்படுத்தி கூடுதலாக 13 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு ஏற்படுத்தி மொத்தமாக 43.15 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியாக மாற்றப்பட உள்ளது. ஏரியில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி கரை அமைத்து பொதுமக்களுக்கு நடைபயிற்சிக்கான பாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. பறவைகள் தங்கும் வகையில் இந்த ஏரிக்குள் 3 செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் என்றுமே வற்றாத நிலையில் இருந்த இந்த ஏரியில் தற்போது நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு ஆழப்படுத்தும் பணி வேகமான நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ரெட்டேரி ஏரியை ஆதாரமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள செகரட்டரியேட் காலனி, அன்பழகன் நகர், எட்டியப்பன் நகர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் குடும்பங்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
வற்றாத ரெட்டேரி ஏரியில் எப்போதும் நீர் இருந்ததால் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 80 அடி முதல் 200 அடி வரை போர் போடப்பட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் ஏரியை சுற்றியுள்ள அனைத்து குடியிருப்பு வாசிகளும் நிலத்தடி நீர் இல்லாமல் தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே போர் போட்ட நிலையில் மீண்டும் அவர்கள் வீட்டின் வளாகத்தில் வேறு ஒரு இடத்தில் 300 அடி முதல் 400 அடி வரை பள்ளம் தோண்டி போர் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே அப்பகுதியில் கூடுதலாக குடிநீர் தொட்டி அமைத்து லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் மேலும் ரெட்டேரி ஏரியில் நடைபெறும் ஆழப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.