என் மலர்
தமிழ்நாடு
பவானி சாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்
- பயிற்சியாளர்களுக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நான்கு நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
- பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சுமார் 700 நபர்கள் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சுமார் 700 நபர்கள் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் நான்கு நவீன வகுப்பறைகள், இரண்டு தங்கும் விடுதிகள், ஒரு உணவருந்தும் கூடம், ஒரு பல்நோக்கு அரங்கம் ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு விடுதிகளிலும், மாற்றுத்திறனாளி பயிற்சியாளர்களும் எவ்வித இடர்பாடுகளுமின்றி எளிதில் தங்கி பயிற்சிபெறும் வகையில் தனி அறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சியாளர்களுக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நான்கு நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
புதிய பல்நோக்கு அரங்கில் ஒரே சமயத்தில் 1500-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களுக்கு உடற்பயிற்சி, யோகா பயிற்சி, கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள் போன்றவை நடத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரன், அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரியின் கூடுதல் இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.