என் மலர்
தமிழ்நாடு
சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
- பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி நிரம்பி அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிக்கு தண்ணீர் சென்றது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சிவதாபுரம் வழியாக சித்தர்கோவில், இளம்பிள்ளை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீடுகளில் புகுந்த தண்ணீரை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.