என் மலர்
தமிழ்நாடு
ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ். போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம்
- எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர்.
- தலைமை பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறார் சிவபதி
சென்னை:
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அ.தி.மு.க.வின் வேகம் குறைந்துவிட்டது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள இரட்டை தலைமை முறை தான் இதற்கு காரணம் என்பது மக்கள் மனதில் பொதுவான எண்ணமாக உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமை யின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார்.
கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 6-வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர். தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தும் வகையில் இன்று அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
இதுஒருபுறமிருக்க ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக இன்று காலை செங்கோட்டையன், தம்பிதுரையை தொடர்ந்து மேலும் சிலர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்றனர். ஆனால் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
ஓ.பன்னீர் செல்வம் சமரசம் ஆகவில்லை என்பதை மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நீண்டநேரம் மூத்த தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒற்றை தலைமை முடிவை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசனை செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பிரச்சினை செய்தால் அது செல்லுபடி ஆகுமா என்றும் விவாதித்தனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டை போடுவதை அதிரடியாக தகர்க்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒற்றை தலைமை பற்றி தீர்மானம்கூட கொண்டுவரக்கூடாது என்று ஓ.பி.எஸ். சொல்வதற்கு பெரும்பாலான தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பெரும்பாலானவர்கள் அதிரடி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்ந்து ஒற்றை தலைமை முடிவில் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளனர்.
எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி 4ஆண்டுகளாக திறமையாக ஆட்சி நடத்தினார். எனவே அவரிடம் கட்சி தலைமையை ஒப்படைப்பது தான் சாலச்சிறந்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை பதவியை ஓ,பன்னீர் செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் தெரிவிப்பது நல்லது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் எனது ஆதரவு. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை உள்ளதால் நானும் அந்த பக்கம் தான் உள்ளேன், என்றார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து ஆலோசனையை தீவிரப்படுத்துவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அவர்களது ஆதரவாளர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.