என் மலர்
தமிழ்நாடு
பாம்பு கடித்து உயிருக்கு போராட்டம்: ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் பரிதாபமாக உயிரை விட்ட மூதாட்டி
- தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார்.
- ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). இவரது மனைவி குணசுந்தரி (55). இவர் நேற்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் இவரை பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத அவருக்கு நேரம் செல்லச்செல்ல உடலில் விஷம் பரவி சோர்வானார்.
அதன்பிறகே தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார். இருப்பினும் அவர் சுய நினைவுடன் இருந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு மதியம் 1 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை நடந்தது.
அப்போது வரை குணசுந்தரி சுயநினைவுடன் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல் முழுவதும் விஷம் பரவி உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.
சமீப காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் இல்லையென, சிகிச்சைக்காக வந்து இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில் தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்த 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பரிதாபமாக ஒரு உயிர் போய்விட்டதே என அனைவரும் ஆதங்கப்பட்டனர்.
முன்னதாக குணசுந்தரியை நரிக்குடிக்கு அழைத்து வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பாம்பு கடித்து விட்டது என்று உறவினர்கள் பதட்டத்துடன் கூறியபோது, அங்கு பணியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் உள்ள சீட்டு பதியும் இடத்தில் நோட்டு வாங்கி வா, முதலில் பெயரை பதிவு செய்ய வேண்டுமென மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொண்டதாகவும் உறவினர்கள் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருஞ்சிறை பகுதியை சேர்ந்த அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் மணிகண்டன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது இதே நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாததால் தான் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரது மனைவியும், உறவினர்கள் கோபமடைந்து மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போதும் இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து நாளைடைவில் நரிக்குடி அரசு மருத்துவமனை பக்கமே நோயாளிகள் வராமல் போகும் சூழ்நிலை கூட மிக விரைவில் ஏற்படும் என ஆவேசத்துடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட கலெக்டர் உயிருக்கு போராடும் மனித உயிர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.