என் மலர்
தமிழ்நாடு
நத்தம் அருகே விஷக்காளான்கள் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு
- கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
- மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூமாதேவி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தனது வீட்டு அருகே விளைந்த காளான்களை பறித்து பூமாதேவி சாப்பிட்டார். மேலும் தனது குழந்தை மற்றும் கணவருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு உண்டானது. உடனடியாக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்டது விஷக்காளான் வகையை சேர்ந்தது என்பதும் அதனால் தான் இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.