என் மலர்
தமிழ்நாடு
61-வது முறையாக திருடி ஜெயிலுக்கு சென்ற வாலிபர்
- பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வாய்தாவுக்கு ஆஜராவதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார்.
- அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சுற்றி திரிந்த அவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடி உள்ளார்.
பொள்ளாச்சி:
கோவை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசார் அவரது வாகனத்தை மறித்தனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றார்.
போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சித்திரை அடங்கம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் மீது, 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இவரது தொழிலே திருடி விட்டு ஜெயிலுக்கு செல்வது, மீண்டும் வெளியில் வந்து திருடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி 60 முறை ஜெயிலுக்கு சென்று வந்துள்ளதும் தெரியவந்தது.
நேற்று லட்சுமணன் பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வாய்தாவுக்கு ஆஜராவதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜராகி விட்டு, ஊருக்கு செல்லாமல், பொள்ளாச்சியிலேயே சுற்றி திரிந்தார். நேற்று மாலை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சுற்றி திரிந்த அவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடி உள்ளார்.
அந்த மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு வலம் வந்தார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டி சென்ற லட்சுமணன் அந்த பகுதியில் இருந்த ஒரு கடையை உடைத்து அங்கிருந்த ரூ.1,870யை எடுத்தார்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிரா மற்றும் பூட்டை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததும், மகாலிங்கபுரத்தில் வந்த போது போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லட்சுமணனிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், பூட்டுகள், திருடுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஜெயலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
60 முறை திருடி ஜெயிலுக்கு சென்று வந்தவர் தற்போது 61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.