என் மலர்
தமிழ்நாடு

அழகர்கோவில் முன்பு பா.ஜ.க. கொடிக்கம்பம் நட முயன்ற 150 பேர் கைது

- அனுமதியின்றி கொடிக் கம்பம் நட முயன்றதாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- போலீசார் கோட்டைவாசல் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலூர்:
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கட்சி கொடிக்கம்பம் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் நட முயன்றதாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் கோட்டை வாசல் முன்பு பா.ஜ.க. கொடிக்கம்பம் இன்று நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் மன்னவன், மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்பட ஏராளமான போலீசார் கோட்டைவாசல் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.
பா.ஜ.க. மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பேரணியாக கொடிக்கம்பம் நட கோட்டைவாசல் முன்பு திரண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் கொடிக்கம்பம் நட அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனாலும் அதனை மீறி பா.ஜ.க.வினர் கொடிக்கம்பம் நட முயன்றனர்.
இதையடுத்து அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்றதாக பா.ஜ.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.