search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்லி விரைகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமியை சமரசம் செய்ய திட்டம்
    X

    டெல்லி விரைகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமியை சமரசம் செய்ய திட்டம்

    • அ.தி.மு.க. கூட்டணி முறிவு தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விளக்கங்களை கேட்க இருப்பதாக தெரிகிறது.
    • அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்றிருப்பதாகவே டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.

    சென்னை:

    பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனி கூட்டணியை அமைக்கப் போவதாக கூறி இருப்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவை டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறி இருப்பது தங்கள் கட்சியின் எதிர்கால நலனுக்கு உகந்தது இல்லை என்பதே பாரதிய ஜனதா நிர்வாகிகளின் எண்ணமாகவும் உள்ளது.

    இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசி உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று கோவையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி விரைகிறார்.

    அங்கு பாரதிய ஜனதா கட்சியின் மேல்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு பிரச்சனையை வளரவிட்டது தொடர்பாக டெல்லி மேலிட தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விவரங்களை கேட்க உள்ளனர்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. வுடன் இணக்கமாக சென்று சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்களுக்கு அ.தி.மு.க.வின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    இதனால் நிலைமை இவ்வளவு தூரத்துக்கு செல்லும் வரை வளர விடாமல் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை முன்கூட்டியே சமாதானப்படுத்தி இருக்கலாமோ என்கிற எண்ணமும் பாரதிய ஜனதா தலைவர்கள் மனதில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமியை சமரசம் செய்து விடமுடியும் என்றே அவர்கள் நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாகவும், கூட்டணி இன்றி போட்டியிட்டால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் அண்ணாமலையுடன் டெல்லி மேலிட பா.ஜனதா தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். இன்று இரவு டெல்லியை சென்றடையும் அண்ணாமலை நாளை காலையில் டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    அப்போது அ.தி.மு.க. கூட்டணி முறிவு தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விளக்கங்களை கேட்க இருப்பதாக தெரிகிறது.

    கூட்டணியை முறித்துக் கொண்டு செல்வதற்கு அண்ணாமலையே காரணம் என்று அ.தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்றிருப்பதாகவே டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.

    இதனால் கூட்டணி முறிவு விவகாரத்தில் அவரை கடிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டுக்கொடுப்பதற்கு டெல்லி மேலிடம் தயாராக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி டெல்லி பா.ஜனதா மேலிட தலைவர்கள் அண்ணாமலைக்கு முழு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவே கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை விட்டு விடவும் டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. கூட்டணியில் செல்வாக்கு உள்ள கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வுடனான உறவை முறித்து தனித்து போட்டியிடுவது என்பது தற்கொலைக்கு சமமானது என்பதையும் மேலிட தலைவர்கள் உணர்ந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

    எனவே எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது சமாதானப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதிலும் டெல்லி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கான திட்டத்தையும் அவர்கள் வகுத்துள்ளனர். அது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×