என் மலர்
தமிழ்நாடு

கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய காட்சி.
ஒரே நேர்கோட்டில் தோன்றிய கோள்களால் சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து- ஆற்காடு ஜோதிடர் பகீர் தகவல்

- வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றியது சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவையாகும்.
- 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது.
வேலூர்:
வானில் 50 ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடந்தது.
வானில் பிரகாசமாக தோன்றிய இந்த அதிசய நிகழ்வை கண்ட பொதுமக்கள் வீட்டின் மாடிகளுக்கு சென்று தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் பதிவு செய்தனர்.
கேமரா செல்போன்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய சந்திரனுடன் 3 கோள்கள் இணைந்த இந்த அதிசய நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கிடையில், சூரிய மண்டலத்தின் பிரகாசமான 2 கிரகங்கள்-வியாழன் மற்றும் வீனஸ் ஆகியவை மார்ச் 1-ந் தேதி மிக நெருக்கமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நெருங்கி வருகின்றன.
மார்ச் 1-ந் தேதி கிரகங்கள் மிக அருகில் இருக்கும். சந்திரன் 0.52 டிகிரி இடைவெளியில் வியாழன் அளவு-2.1 ஆகவும், வீனஸ்-4.0 அளவிலும் பிரகாசிக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அடி வானத்தில் இதனை தாழ்வாக காண முடியும்.
வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வு குறித்து ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தர ராஜன் ஐயர் கூறியதாவது:-
வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றியது சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவையாகும்.
3-ம் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த நிகழ்வு வரும் பவுர்ணமி வரை தொடர்ந்து 10 நாட்கள் நீடிக்கும்.
இதனால் பல்வேறு நன்மைகளும் தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரிய நிகழ்வு மூலம் மக்கள் சுபிட்சமான வாழ்வினை பெறுவார்கள். வானலாவிய புதிய கட்டிடங்கள் உருவாகும்.
வேலையில்லா திண்டாட்டம் தீரும். மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படும். புதிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
ஆன்லைன் வியாபாரம் தொடர்ந்து சூடு பிடிக்கும். பெரிய செல்வந்தர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழ்மை நிலையை அடையும் சூழ்நிலை உருவாகலாம். வாகன விபத்துக்கள் அதிகரிக்கும்.
வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும். இளம்வயது சிறுவர்களை நோய்கள் அதிகளவில் தாக்கும், நாய்கள் இனவிருத்தி அதிகரிக்கும். தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.