என் மலர்
தமிழ்நாடு
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மாயாவதி - நாளை இறுதி ஊர்வலம்
- ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்த தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக 3 மாடிகளை கொண்ட வீட்டை கட்டி வந்தார். தினமும் வீடு கட்டும் இடத்தில் சேர் போட்டு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். பின்னர் அயனாவரம் வேணுகோபால் தெருவில் தற்போது வசித்து வந்த வீட்டுக்கு செல்வார்.
நேற்று இரவும் வழக்கம் போல புதிய வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த போதுதான் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டப்பட்டார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதலாவதாக அயனாவரம் இல்லத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு பெரம்பூர் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்படுகிறது.
இதன்பின், செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நாளை பிற்பகலுக்கு இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.