search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்
    X

    சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்

    • குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
    • கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    கிருஷ்ணகிரி:

    ஆந்திர மாநில முதல்-அமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்.கே.ஹாலில் நேற்று சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மாநிலங்களில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் ஆந்திரா மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் குப்பம், திருப்பதி செல்லும் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையான காளிக்கோவில் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

    குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நேற்று கைதான சந்திரபாபு நாயுடுவை பார்க்க சென்ற நடிகரும், ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக பவன்கல்யாண் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆந்திரா, மாநிலத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், வேப்பனபள்ளி வழியாக ஆந்திரா எல்லை பகுதியில் இன்று 2-வது நாளாக தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், எல்லை பகுதியான காளிகோவில் வரை சென்று திருப்பி விடப்பட்டன.

    ஆந்திராவில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வழியாக செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் ஆகிய அனைத்தும் வாகனங்களையும் பாதி வழியிலேயே இன்று 2-வது நாளாக திருப்பி அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    Next Story
    ×