என் மலர்
தமிழ்நாடு
புயல் சின்னம் எதிரொலி- ராமேசுவரத்தில் சூறாவளி காற்று: 9 படகுகள் சேதம்
- தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கிறது.
- சில இடங்களில் கடல் உள்வாங்கியதாலும் படகுகள் தரை தட்டி தேமடைந்தன.
ராமேசுவரம்:
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டப்படகுகள் ராமேசுவரம், பாம்பன் துறை முகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல் வழக்கத்தை விட ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. இன்று காலையும் பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதன் தாக்கமாக பாம்பன் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 விசைப்படகுகள், 5 நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதில் சில படகுகள் கடல் அலையால் இழுத்து வரப்பட்டு கரை தட்டியது.
இதையடுத்து மீனவர்கள் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் கடல் உள்வாங்கியதாலும் படகுகள் தரை தட்டி தேமடைந்தன. அதனையும் மீட்கும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.