என் மலர்
தமிழ்நாடு
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா?- மனோ தங்கராஜ் கேள்வி
- பா.ஜ.க.வினர் தேர்தலில் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
- உலகிலேயே ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வைத்து பயமுறுத்துகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், அமைச்சர் மனோதங்கராஜ் மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் குலசேகரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் தேர்தலில் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவேன் என்றார்கள். ஆனால் அது செங்கலுடன் தான் நிற்கிறது. அதேபோல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார்கள். கொடுத்தார்களா?. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தினார்கள். தற்போது ஜூலை மாதம் வந்து விட்டது. இவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. யாருக்காவது கொடுத்தார்களா?.
வடநாட்டு கம்பெனியை ப்ரொமோட் செய்ய திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆவின் இந்தியாவிலேயே தலை சிறந்த நிறுவனமாக மாறும். அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் தமிழகத்தில் உள்ளது.
வடநாட்டு கம்பெனிகளை ப்ரொமோட் செய்ய ஆவினுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர். அண்ணாமலை உளறி வருகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏதாவது ஒரு நல்ல கருத்தை பேசுகிறாரா?.
உலகிலேயே ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வைத்து பயமுறுத்துகின்றனர். அவர்களுக்கு தக்க பாடம் விரைவில் கிடைக்கும். இது தமிழ்நாட்டில் நடக்காது. தமிழ்நாடு கலைஞரின் பாசறை. அவர்களின் எந்த செயலும் இங்கு எடுபடாது. கொள்கையால் கட்டப்பட்ட இந்த இயக்கத்தை பிரிக்கவே முடியாது.
மணிப்பூரில் வெறுப்பு பிரசாரத்தை முன்வைத்து கலவரத்தை தூண்டி, பகைமையை உண்டாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் பா.ஜ.க.வும், அந்த கட்சியில் உள்ள அமைச்சர்களும் தான்.
அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கன்னியாகுமரியில் போட்டி போட சொல்லுங்கள். நாங்கள் யார் என காட்டுகிறோம். அண்ணாமலை சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற தேர்தலிலோ போட்டியிட தைரியம் இருக்கிறதா?. நாங்கள் அவரின் டெபாசிட்டை இழக்க செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.