என் மலர்
தமிழ்நாடு
மேலூரில் இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்: அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு
- மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெரியார் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பெரியாறு கால்வாய் மூலம் மேலூர் பகுதியில் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு குடிநீருக்காக 10 நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் தங்கள் பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக மேலூர் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கடையடைப்பு, ஊர்வலம், பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை ஆகிய போராட்டங்கள் இதுவரை நடத்தி முடித்து விட்டனர்.
ஆனால் இவர்களது கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் இன்று மேலூர் பஸ் நிலையம் அருகே ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மேலூர் அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டது. மேலும் அதன் எதிரொலியாக இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சூழ்நிலையாவது மேலூர் பகுதிக்கு பெரியார் கால்வாயில் இருந்து தாமதிக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.