search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X
    விவசாய சங்க பிரதிநிதிகள் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி

    ஈரோட்டில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார்.

    கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்து கொண்டிருந்தனர். பின்னர் விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது காலிங்கராயன் பாசன பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகவும், குறைகளை தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறி கையில் பதாகைகளுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    காலிங்கராயன் தண்ணீர் திறப்பு, நெல்கொள்முதல் மையம் உள்ளிட்டவற்றிற்கு மாவட்ட அதிகாரிகள் முன்னுரிமை தருவதில்லை என குற்றம்சாட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வருவாய் அலுவலர், விவசாயிகள் பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டம் குறித்து காலிங்கராயன் விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் சேது கூறியதாவது:-

    காலிங்கராயன் பாசனப்பகுதியில் பிரச்சனைகள் பல உள்ளன. இது தொடர்பாக கலெக்டரிடம் கடந்த 6 மாத காலமாக மனுக்களை கொடுத்து வந்தோம். சட்டவிரோதமாக செங்கல் சூலைகளுக்கு மண் அள்ளப்படுகிறது.

    காலிங்கராயன் கால்வாயில் கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக மனுக்களை அளித்தோம். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேசுவதற்கு கூட்டத்தில் அனுமதியும் மறுக்கப்பட்டது. எனவே இதனை கண்டித்து நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    Next Story
    ×