என் மலர்
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் 2 நாட்கள் நிகழ்ச்சி- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை வருகை
- நாளை மறுநாள் 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்கிறார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை திருவண்ணாமலைக்கு வருகிறார்.
கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்குகிறார். மாலை 4 மணிக்கு இயற்கை விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு ரமணா ஆசிரமம் செல்கிறார். மாலை 6 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் சென்று, அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் கவர்னர் கிரிவலம் செல்கிறார்.
நாளை இரவு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கிவிட்டு, நாளை மறுநாள் 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து ஜவ்வாதுமலைக்கு சென்று ஜமுனாமரத்துாரில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் குனிகாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் படிக்கும் எஸ்.எப்.ஆர்.டி. மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்கிறார். அங்கு மாணவ, மாணவிகள், மலைவாழ் பெற்றோர்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மதியம் 1 மணிக்கு மீண்டும் சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்து விட்டு அதன்பிறகு ஆலங்காயம் சாலையில் உள்ள காவலூர் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்கிறார். மாலை செஞ்சிக்கோட்டை செல்கிறார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.