என் மலர்
தமிழ்நாடு
நெல்லை மாவட்ட அணை பகுதியில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
- மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
- காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதில் தென்மாவட்டங்களில் வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே பருவமழை பெய்தது. இதனால் குளங்கள் வறண்டன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை குறைவால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. மேலும் கோடையை மிஞ்சும் வகையில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது.
நெல்லையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 48.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 5 அடி உயர்ந்து 54.20 அடியை எட்டியது.
இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 22 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் 156 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 72.93 அடியானது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 3,184 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 354 கனஅடி நீர் வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் 118 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 41.30 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சுமார் 2 அடி அதிகரித்து 43.10 அடியானது. கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பையில் 21 மில்லிமீட்டரும், களக்காட்டில் 13.6 மில்லி மீட்டரும், கன்னடியனின் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு இரவு வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் 14.7 சென்டி மீட்டரும், மாஞ்சோலை எஸ்டேட்டில் 86 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 61 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, வீரவ நல்லூர், முக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 10.8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
கடனா, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடியும், குண்டாறு அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அடவி நயினார் அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை 53 அடியாகவும், கடனா அணை 47.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.
மாவட்டத்தில் செங்கோட்டையில் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சிவகிரியில் 28 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 22 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் மெயின் அருவிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அந்த அருவியில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களில் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.