search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குளச்சலில் பச்சை நிறமாக மாறிய கடல் நீரில் செத்து மிதந்த மீன்கள்
    X

    குளச்சலில் பச்சை நிறமாக மாறிய கடல் நீரில் செத்து மிதந்த மீன்கள்

    • சுனாமிக்கு பிறகு குமரி மாவட்ட கடல் பகுதிகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.
    • குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்தது.

    குளச்சல்:

    சுனாமிக்கு பிறகு குமரி மாவட்ட கடல் பகுதிகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அடிக்கடி கடல் நீர் மட்டம் தாழ்வு, உள் வாங்குதல், அதிகமான கொந்தளிப்பு, திடீர் சீற்றம் என பல்வேறு நிகழ்வுகளை கடல் சந்தித்து வருகிறது. இதனால் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் பச்சை நிறத்தில் காணப்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

    சீறி வந்த அலைகள் கரைக்கு வந்தபோது பச்சை நுரை பொங்க வந்தது. அதேநேரம் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.கடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் சிறிய வகை மீன்கள் உயிரிழக்க கூடும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். இருப்பினும் கடல் நீர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி கடலோர காவல் குழுமத்திற்கும், மீன்வளத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    மேற்கு அரபிக்கடல், ஆழ்கடல் பகுதி என்பதால் மற்ற கடல் பகுதிகளை விட இங்கு கடல் அலைகள் சற்று சீற்றமாகவே காணப்படும். ஆனால் கடல் பச்சை நிறத்துக்கு மாறியது ஏன்? என்பது தான் தற்பொழுது கேள்விக்குறியாக உள்ளது.

    பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் சில நேரங்களில் பச்சை நிறமாக காட்சியளிக்கும்.இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து அவை உயிரிழக்க கூடும். ஆனால் அரபிக்கடல் போன்ற ஆழ்கடல் பகுதிகளில் இது போன்ற பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் தற்போது கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை வேறு ஏதும் ரசாயனக் கழிவுகள் கலந்தது காரணமா? என சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கடல் நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

    இந்த சூழலில் இன்று காலை கடல் பகுதியில் ஏராளமான குஞ்சு மீன்கள் செத்து மிதந்தன. இது மீன வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    Next Story
    ×