என் மலர்
தமிழ்நாடு
கடையநல்லூரில் அம்மன் கோவில்களில் நகை திருடிய பெண் கைது
- கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர்.
- பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் கங்கை அம்மன் கோவில், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் தினமும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்பதால் கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 17-ந்தேதி கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் திடீரென கோவில் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகையை திருடி சென்றுள்ளார். மேலும், அதன் அருகில் உள்ள மேலும் 2 கோவில்களிலும் அம்மன் கழுத்தில் கிடந்த நகையை திருடிச்சென்றார்.
இதுகுறித்து ஊர் நாட்டாமை செல்வகுமார் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நகையை திருடிச்சென்ற பெண் குறித்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளத்தை அடுத்த ராமசாமியாபுரத்தை சேர்ந்த அருள் செல்வன் மனைவி சண்முக சுந்தரி (வயது 35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர். இவர் ஏற்கனவே பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.