search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் திடீர் மரணம்
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் திடீர் மரணம்

    • 2021-ம் ஆண்டு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தமிழ்மாநில காங்கிரசுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்கப்படவில்லை.

    கோவை:

    கோவை கிருஷ்ணா நகர், கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கோவை தங்கம்.

    இவர் காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிகளில் மாவட்ட தலைவர், பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    சமீபத்தில் அவர் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி கோவை தங்கம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கோவை தங்கம், அரசு கலைக்கல்லூரியில் பி.யு.சி படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 1968 முதல் 1972 வரை காலகட்டத்தில் கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1972-92 வரை கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

    பின்னர் 1996-ல் மூப்பனார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அதில் கோவை மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பதவி வகித்தார்.

    மீண்டும் தமிழ்மாநில காங்கிரஸ் 2003-ல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. அதனை தொடர்ந்து காங்கிரசில் பொருளாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தார்.

    இவர் 2001 மற்றும் 2006 சட்டசபை தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2011-ல் இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதேபோல் 1996-ல் பொள்ளாச்சி எம்.பி. தொகுதியிலும் போட்டியிட்டார்.

    2021-ம் ஆண்டு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தமிழ்மாநில காங்கிரசுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்கப்படவில்லை.

    இதையடுத்து, அவர் த.மா.கா.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து தி.மு.கவுக்கு ஆதரவாக வால்பாறை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×