என் மலர்
தமிழ்நாடு
அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள்... ஐகோர்ட்
- விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
- நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும்.
சென்னை:
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த அவசர வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் போல் எதிர்காலத்தில் ஏதேனும் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? என கேள்வி கேட்ட நீதிபதி பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போதைக்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படக்கூடாது. இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள், உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இதன்பின் மீண்டும் 12 மணிக்கு வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது
இதையடுத்து பேசிய நீதிபதி, புதிய இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் புதிய மனு அளிக்க வேண்டும். விண்ணப்பித்ததை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிவர வேண்டும். அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்றார்.