என் மலர்
தமிழ்நாடு
திருமணமான ஒருமணி நேரத்தில் காதல் கணவர் கைது- கல்லூரி மாணவி அதிர்ச்சி
- போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.
- சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). இவர் உடுமலைப்பேட்டையில் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வசந்த் தனது காதலியை வடமதுரையில் உள்ள கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெண்வீட்டார் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். இதற்குள் காதல் மனைவியுடன் வசந்த் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கைது செய்தனர். மேலும் தங்கள் காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மாணவியிடம் காரில் வந்த கும்பல் விசாரித்த போது தங்களுக்கு இப்போதுதான் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து வசந்தை வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர்கள் தாங்கள் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் என தெரிவித்தனர். வசந்த் விருதுநகரில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியதால் அவரை பிடிக்க மப்டியில் தேடி வந்ததாகவும், வடமதுரையில் இருப்பது தெரியவரவே அவரை கைது செய்து காரில் அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.
இதைக்கேட்ட கல்லூரி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் போலீசார் அவருக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் ஊருக்குச் செல்லுமாறு கூறி அறிவுரை வழங்கினார். திருமணமான ஒருமணிநேரத்தில் காதல் கணவரை மனைவி கண்முன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.