என் மலர்
தமிழ்நாடு
சூரிய ஒளிக்கதிர் மூலம் மகாத்மா காந்தியின் உருவப்படம் வரைந்த மயிலாடுதுறை வாலிபர்
- பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார்.
- உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிர் மூலம் பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார்.
அதாவது பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார். அப்போது உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும். இதன்பின் பஞ்சை வைத்து துடைத்து உருவத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பார். இந்த முறைக்கு 'பர்னிங் வுட் ஆர்ட்' என்று பெயர். இந்தியாவிலேயே இவர் ஒருவர் மட்டும்தான் இந்த முறையில் ஓவியம் வரைந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.
பின், அங்குள்ள டேனிஸ் கோட்டை முன்பு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தியின் உருவபடத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் மூலம் மரப்பலகையில் வரைந்து அசத்தி உள்ளார்.
மேலும், அவர் வரைந்த ஓவியத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.