என் மலர்
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம்- பள்ளி மீட்பு நடவடிக்கைக்கு அதிகாரி நியமனம்
- திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.
- 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டார்.
முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பள்ளியை மீட்கும் நடவடிக்கையாக புதிய ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சூறையாடப்பட்ட பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.