என் மலர்
தமிழ்நாடு
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஊர் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு
- ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இதில் எட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இருந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.
ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப்பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.