என் மலர்
தமிழ்நாடு

தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

- காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழின் இலக்கிய செழுமையை உலகறிய செய்யும் வகையில் பொருநை இலக்கிய திருவிழா தமிழக அரசு சார்பில் நெல்லையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்கான தொடக்க விழா பாளை நேருஜி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விழா பேருரையாற்றினர்.
பொது நூலக இயக்குநர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ வாழ்த்துரை வழங்கினர்.
விழாவை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடி, சிவகளை, கொற்கை போன்ற அகழாய்வு வழியாகவும், பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும், அறிவியல் பூர்வமாக நிறுவப்படும் தொன்மை மிகுந்தது நமது பெருமை. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
தமிழின் இலக்கிய செழுமையை போற்றும் வகையில் பொருநை, காவேரி, வைகை, சிறுவாணி, சென்னை போன்ற 5 இலக்கிய திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
இதில் முதல் நிகழ்வாக அன்னை மடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கிய திருவிழா சிறந்ததொரு முயற்சி.
'அறிவை விரிவு செய், அகண்டமாக்கு' என்ற பாவேந்தர் பாரதிதாசன் சொல்லுக்கு இணங்க தமிழ்மண்ணின் செழுமைகளை உலகுக்கு எடுத்துரைக்க பொருநை இலக்கிய திருவிழா அமையட்டும்.
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்மண்ணில் இருந்து எழுதப்படட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எழுத்தாளர்கள் கல்பெட்டா நாராயணன், வண்ணதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளை ஒன்றிய சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், மத்திய மாவட்ட துணைசெயலாளர் விஜிலாசத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர் கருப்பசாமி கோட்டை யப்பன், இளைஞரணியை சேர்ந்த ஆறுமுகராஜா, வீரபாண்டியன், பாளை தாசில்தார் ஆனந்தபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.