search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மண்டைக்காட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
    X

    பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சி.


    மண்டைக்காட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

    • கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சேலம், மதுரையிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மண்டைக்காடு அருகே கருமன் கூடல் பகுதியில் பாரதிய ஜனதா பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இவர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் மர்மநபர்கள் இவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசினர்.

    இதில் அவரது வீட்டின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. சத்தம் கேட்டு கல்யாண சுந்தரம் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் மண்டைக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கல்யாண சுந்தரம் வீட்டின் முன் பகுதியில் 2 பாட்டில்கள் உடைந்து கிடந்தது. மர்மநபர்கள் அந்த பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    போலீசார் அந்த பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் உள்ள 2 மர்மநபர்கள் வருகிறார்கள். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி 2 பாட்டில்களில் தீயை பற்ற வைத்து கல்யாண சுந்தரம் வீட்டில் வீசுகிறார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல்வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொதுமக்களும் அந்த பகுதியில் குவிந்தனர். பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×