என் மலர்
தமிழ்நாடு
செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
- போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- ஜாமினில் வெளிவந்த விவசாயிகள் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி விவசாயிகள் 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி இன்று காலை 14 பேரும் வேலூர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் அனைவரும் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஜெயிலில் உள்ள மற்ற விவசாயிகளுக்கும் ஜாமின் வழங்க வேண்டும். அரசு சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்யாறில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டு சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரளான கட்சியினர், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.