என் மலர்
தமிழ்நாடு
கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்க போலீசார் நியமனம்
- பல்வேறு பகுதிகளில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
- சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்பட அனைத்துவித துறைகள் சார்ந்த பிரச்னைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
கோவை:
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக கோவை மாநகர போலீஸ் சார்பில் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர போலீசாரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க வசதியாக நடைபாதையை ஒட்டிய பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து பணியாற்றும் வகையில் ஒரு ஆண், ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்பட அனைத்துவித துறைகள் சார்ந்த பிரச்னைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இதை பதிவு செய்து கொள்ளும் அங்குள்ள போலீசார்கள், சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தகவல் அளிப்பார்கள். அவர்கள் அந்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் போலீசாருடன் தொடர்பில் இருப்பர். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.