என் மலர்
தமிழ்நாடு
அன்னூர், மேட்டுப்பாளையத்தில் மருந்து கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சளி இருமல் மற்றும் தூக்கம் வரவழைக்கக் கூடிய மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது.
- போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அன்னூர்:
கோவையில் கஞ்சா,போதை மாத்திரைகள்,ஸ்டாம்பு போல் இருக்கும் போதை வஸ்துகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது.
குறிப்பாக கல்லூரி மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் மருந்து கடைகளிலும் போதை தடுப்பு இன்ஸ்பெக்டருடன் சென்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கோவையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் மருந்து ஆய்வாளரும், போதை தடுப்பு இன்ஸ்பெக்டருமான பிரகாஷ் இணைந்து அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருந்து கடைகளில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வழங்கப்படுகிறதா? பள்ளி, கல்லூரி மாணவர்கள் எவரேனும் ரெகுலராக வலி நிவாரணி மருந்து வாங்குகிறார்களா ? என்பது குறித்து கடைக்காரர்களிடம் விசாரித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகர் பகுதியில் உள்ள 3 மருந்தகங்களில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி, சுல்தான் இப்ராகிம் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் மருந்தகங்களில் இந்திய அரசு தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் அதிகளவில் ஏற்றக்கூடிய மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சளி இருமல் மற்றும் தூக்கம் வரவழைக்கக் கூடிய மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது என மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.