search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    • புதுச்சேரியில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஆம்னி பஸ் ஒன்று மதுரைக்கு வந்தது.
    • ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசனை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை:

    புதுச்சேரியில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஆம்னி பஸ் ஒன்று மதுரைக்கு வந்தது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்த வேகத்தடையில் அந்த பஸ் வேகமாக சென்றதால், பஸ்சில் பயணித்து வந்த மல்லிகா என்ற பெண் படுகாயம் அடைந்தார்.

    தலையில் அடிபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய ஒத்தக்கடை போலீசார், பெண் பயணி பலியாவதற்கு காரணமாக இருந்த ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

    போலீஸ் நிலையத்தில் உள்ள பஸ்சை மீட்க, ஆம்னி பஸ்சின் உரிமையாளர் முயற்சி மேற்கொண்டார். அவர் ஒத்தக்கடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது பஸ்சை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார்.

    ஆம்னி பஸ் உரிமையாளரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அது தொடர்பான தகவல் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி ஆகியோரின் கவனத்துக்கு சென்றது.

    மேலும் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது தொடர்பாக டி.ஐ.ஜி.யிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசனை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டுள்ளார். டி.ஐ.ஜி.யின் இந்த அதிரடி நடவடிக்கை மதுரை சரக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×