என் மலர்
தமிழ்நாடு
கோவை செல்வபுரத்தில் குளம் நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தவிப்பு
- சகதியும், சேறுமாக வீடுகளில் படிந்துள்ளதால் அவற்றை சுத்தப்படுத்திய பிறகு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
- செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கோவை:
கோவை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை மாவட்டத்தையே புரட்டிப்போட்டது.
நள்ளிரவு 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை காலை 8 மணி வரை இடை விடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளங்களில் மழை நீர் தேங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
சில இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை நகர் பகுதியான செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம் உள்ளது. இந்த குளமும் நேற்று நிரம்பியது. தண்ணீர் குளத்துக்கு வந்து கொண்டே இருந்ததால் உபரிநீர் குளத்தில் இருந்து வெளியேறியது.
குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குளத்தை ஒட்டியுள்ள அசோக் நகர், பிரபு நகர், சாவித்திரி நகருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.
மழை ஓய்ந்ததால் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. வீடுகளை சூழ்ந்து நின்ற தண்ணீரும் வடியத் தொடங்கி உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் மண்டபத்திலேயே தங்கி உள்ளனர். சகதியும், சேறுமாக வீடுகளில் படிந்துள்ளதால் அவற்றை சுத்தப்படுத்திய பிறகு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று 2-வது நாளாக தண்ணீர் வடியாமல் அப்படியே நின்றது. இதனால் அந்த ஒரு பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது.
இதேபோல வெள்ளக்கிணறு குட்டைமேடு குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த பகுதியில் கொஞ்சம், கொஞ்சமாக மழை நீர் வடிந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.