என் மலர்
தமிழ்நாடு

பஞ்சாயத்து துணை தலைவருக்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியல்

- ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெம்பக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன் பாண்டியன். இவர் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு கீழராஜ குலராமன் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அவர்களது ஆலோசனை களின்படி பொன் பாண்டியன் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச பணத்தை காளி முத்துவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளிமுத்துவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
லஞ்ச வழக்கில் காளிமுத்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கீழராஜ குல ராமன் ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு துணை தலைவர் குருவைய்யா மற்றும் பஞ்சாயத்து கிளார்க் கருத்தபாண்டி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை வலியுறுத்தி இன்று கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியலால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்தது.