என் மலர்
தமிழ்நாடு

மாங்காடு அருகே ரேஷன் கடை தீ வைத்து எரிப்பு- மர்ம நபர்கள் தீ வைத்தார்களா?

- ரேஷன் கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல்.
- மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த கொளுத்தவான்சேரி பகுதியில் அரசு ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இன்று காலை ரேஷன் கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தீ கொழுந்து விட்டு எரிந்தது கொண்டிருந்தது.
இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரேஷன் கடையில் இருந்த 300 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. மேலும் காலி கோணிகளும் தீயில் எரிந்தது.
இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற் கொண்டனர். கடைக்கு பின் பகுதியில் அமர்ந்து மது அருந்திய மர்ம நபர்கள் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு நெருப்பை ரேஷன் கடைக்குள் போட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.