என் மலர்
தமிழ்நாடு
கொள்ளையனை கண்டுபிடித்து சிலைகளை தேடி கிராமம், கிராமமாக அலையும் பொதுமக்கள்
- கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் சுப்ரமணியம்.
இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆனா கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்துக்காரரான சேகர் என்கிற சொட்டை சேகர் என்பவர் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் இருந்து ஆள் தலைமறைவாக இருப்பதால், அவர் கோவிலில் கொள்ளையடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்தது.
பின்னர் அவரை சந்தேகித்த கிராம மக்கள் அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் என்பவரது வீட்டிலும், இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சேகரின் உறவினர்கள் வீட்டில் அந்த சாமி சிலைகள், பூஜை சாமான்கள் மற்றும் சிலைகளை அவர் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள் சரக்கு ஆட்டோவில் வந்து புளியான்டப்பட்டி கிராமத்தில் அவர் கூறிய வீடுகளுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது பூஜை சாமான்கள் மட்டுமே இருந்தது. சிலைகளை காணவில்லை.
மேலும் சாமி சிலைகளை வேறு எங்கோ மறைத்து வைத்துள்ளதாகவும் சேகர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனால், சேகரை அழைத்து கொண்டு அவர் தெரிவித்த இடங்களில் சரக்கு ஆட்டோவில் கிராம மக்கள் சென்று சிலைகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.