என் மலர்
தமிழ்நாடு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
- விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.
கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.
இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.