என் மலர்
தமிழ்நாடு
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 8 வழி சாலை அமைக்க வேண்டும்- துரை வைகோ
- தி.மு.க. தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளது.
- கிராம மக்கள் புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி மாணவர்கள் 1 மாதத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிகமாக அவர்களை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை. வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து துரை.வைகோ இன்று செட்டிகுளம் கிராமத்திற்கு வந்து தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பள்ளி விவகாரம் தொடர்பாக அமைச்சரை விரைவில் சந்தித்து சுமூகமான முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
தி.மு.க. தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளது. விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். இந்த விசயத்தில் எதிர்கட்சிகள் தவறான தகவலை தருகின்றன.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் 8 வழி சாலை அமைப்பதற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அதிரடியாக நிலத்தை கையகப்படுத்த நினைத்தது. இதற்குத்தான் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி சாலை அமைக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்.
விவசாயிகளிடம் கருத்து கேட்டு அவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் 8 வழி சாலை அமைக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் அனிதா பால்ராஜ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாநாடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.