என் மலர்
தமிழ்நாடு
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் அந்த அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்து இன்று காலை 88.35 அடியானது. அந்த அணை பகுதியில் 34 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 2 அடி அதிகரித்து 101.41 அடியானது. அந்த அணை பகுதியில் 43 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு 913 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.50 அடியாக உள்ளது. அணைக்கு 371 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் வெயில் அடிக்க தொடங்கியது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்றாலும் கனமழை பெய்யக்கூடும் என அச்சமடைந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருவதை தவிர்த்துள்ளனர். குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் மட்டும் குளித்து வருகின்றனர்.
குறிப்பாக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இன்று காலை நிலவரப்படி அங்கு 9.7 சென்டிமீட்டர் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கயத்தாறு, சாத்தான்குளம், கீழ அரசடி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியது. எட்டயபுரம், வைப்பார், சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. அதிகபட்சமாக வேடநத்தம் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.