என் மலர்
தமிழ்நாடு
மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: கணவன்-மனைவி பலி
- டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றதில் பஸ் ரோட்டோரம் உள்ள 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த 35 பேர் சுற்றுலா பஸ் ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் முகாமிட்டு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு தாங்கள் வந்த பஸ்சில் ஊட்டியில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.
நள்ளிரவில் அந்த பஸ் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஊட்டியைச் சேர்ந்த சையது அலி (வயது 42), அவரது மனைவி அஸ்மா (35) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்து கொண்டு இருந்தனர்.
பர்லியார் தோட்டக்கலை பண்ணை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுலாபயணிகள் வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றதில் பஸ் ரோட்டோரம் உள்ள 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த சையது அலி, அவரது மனைவி அஸ்மா ஆகியோர் பஸ்சின் அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
பஸ் கவிழ்ந்ததில் அதில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. ஆம்புலன்சு ஊழியர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.