என் மலர்
தமிழ்நாடு
பிளாஸ்டிக் பை சோதனை என்ற பெயரில் பாரபட்சம் பார்க்கும் அதிகாரிகளால் வியாபாரிகள் பாதிப்பு
- வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
- ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.
ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.