என் மலர்
தமிழ்நாடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று நினைக்க கூடாது- கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்
- முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
- கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.,யு மான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விக்ரம் பட 100 நாள் வெற்றி விழா, பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி பெண்கள் பள்ளி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். தற்போது கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முகாமிட்டது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஓராண்டுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி குறித்து நினைவு வந்துள்ளது. அவர், மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை வாங்கியபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சினையை தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது.
மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனில், நேரடியாக களத்துக்கு வந்து, தான் செய்யும் பணிகளை மக்களிடம் சொல்லட்டும். மக்களுக்கு சேவையாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. இப்போதாவது கோவை தெற்கு குறித்து அவருக்கு ஞாபகம் வந்ததை நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.,யு மான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து ரசிப்பதை கண்டிக்கிறேன். இதற்கென உரிய விளக்கத்தை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.