என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அவமானங்களை புறக்கணித்து அடையாள சின்னமாக மாற்றிய கேப்டன் விஜயகாந்த் அவமானங்களை புறக்கணித்து அடையாள சின்னமாக மாற்றிய கேப்டன் விஜயகாந்த்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/28/1997764-vijayakanth005.webp)
அவமானங்களை புறக்கணித்து அடையாள சின்னமாக மாற்றிய கேப்டன் விஜயகாந்த்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.
- 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்திற்கு பொருத்தமான விஜயராஜ் என்னும் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மகனாக பிறந்தார். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.
பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிறு வயது முதலே சினிமா மீதான ஈர்ப்பும், குறிப்பாக எம்.ஜி.ஆரை கலைக்கடவுளாக வழிபட்டு வந்ததன் காரணமாக பல பள்ளிகள் மாறியும் படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது. 10-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்புக்கு முடிவு கட்டினார். அதேநேரம், தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சிகளாக தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் செயல்பட்டு வந்த தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.
தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவு செய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தை பல்வேறு சவால்களுடன் தொடங்கினார்.
திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜய ராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன்கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக்கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.