என் மலர்
தமிழ்நாடு
மேட்டுப்பாளையம் அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து மிரட்டும் பாகுபலி யானை
- கடந்த 3 மாதங்களுக்கு பின் பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானை காட்டில் இருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது.
- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உணவு, தண்ணீர் தேடி யானை பகலிலேயே நுழைவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.
இந்தநிலையில் அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டுயானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த 3 மாதங்களுக்கு பின் பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானை காட்டில் இருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே வந்த அந்த யானை ஊருக்குள் வந்து சென்றனர்.
நேற்று பகல் நேரத்திலேயே யானை கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். யானை செல்லும் வழியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்கிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உணவு, தண்ணீர் தேடி யானை பகலிலேயே நுழைவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே பகல் நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.